ஸாங்ட தொடக்கப் பள்ளியில் செயல்படும் ‘பிக் ஹார்ட்’ நிலையத்துக்கு நேற்று வருகையளித்த (இடமிருந்து) மெண்டாக்கியின் தலைவரும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி, அமைச்சரவையில் யூரேஷியர்களின் பிரதிநிதியும் தொடர்பு, தகவல் அமைச்சருமான எஸ். ஈஸ்வரன், சுய உதவிக் குழுக்களின் மாணவர் பராமரிப்பு அமைப்பின் தலைவரும் தென்மேற்கு வட்டார மேயருமான லோ யென் லிங், சீனர் மேம்பாட்டு உதவி மன்றத்தின் தலைவரும் போக்குவரத்து அமைச்சருமான ஓங் யி காங் அங்குள்ள மாணவர்களுடன் உரையாடுகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
19 Feb 2021 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Feb 2021 13:56
இனம் சார்ந்த சுயஉதவிக் குழுக்கள் பள்ளிகளில் மாணவர் பராமரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டும் என்று கூட்டாக இணங்கிய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அத்தகைய 30 நிலையங்கள் இப்போது செயல்படுகின்றன.
அவற்றில் இரண்டு நிலையங்கள் கடந்த மாதம் சிஷான் தொடக்கப் பள்ளியிலும் ஸாங்ட தொடக்கப் பள்ளியிலும் செயல்படத் தொடங்கின என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள், சீனர் மேம்பாட்டு உதவி மன்றம், யூரேஷியர் சங்கம், சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், மெண்டாக்கி ஆகியவற்றின் பிரதிநிதிகள் நேற்று ஸாங்ட தொடக்கப் பள்ளியில் செயல்படும் ‘பிக் ஹார்ட்’ மாணவர் பராமரிப்பு நிலையத்தில் ஒன்று கூடி தங்கள் கூட்டு முயற்சியின் ஆண்டு நிறைவையும் புதிய நிலையங்களின் திறப்பு விழாவையும் கொண்டாடினர்.
‘பிக் ஹார்ட்’ மாணவர் பராமரிப்பு நிலையத்தில் 4,200க்கு மேற்பட்ட மாணவர் பதிந்துகொண்டுள்ளனர்.
“சுய உதவிக் குழுக்கள் மற்றும் சமூக பங்காளிகளின் ஆதரவுடன், அனைத்துப் பின்புலங்களிலிருந்து வரும் மாணவர்களுக்குத் தரமான, கட்டுப்படியாகக்கூடிய பள்ளிக்குப் பிந்திய பராமரிப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தை ‘பிக் ஹார்ட்’ அமைப்பு அடைந்துள்ளது.
“கொவிட்-19 நிலவரத்தால் பொருளியல் பாதிக்கப்பட்டுள்ள இந்தத் தருணத்தில் நாங்கள் கொண்டிருக்கும் இலக்கு மாணவர்களுக்குப் பெரிதும் கைகொடுக்கிறது,” என்றார் சுய உதவிக் குழுக்களின் மாணவர் பராமரிப்பு அமைப்பின் தலைவரும் தென்மேற்கு வட்டார மேயருமான திருவாட்டி லோ யென் லிங்.
“ சுய உதவிக் குழுக்கள் ஒன்று சேர்ந்து மாணவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு ‘பிக் ஹார்ட்’ மாணவர் பராமரிப்பு நிலையம் ஒரு முக்கிய தளமாகத் திகழ்கிறது.
“தங்கள் சமூகத்தில் உள்ள மாணவர்களை மேம்படுத்துவதற்கு சுய உதவிக் குழுக்கள் மேற்கொண்டுள்ள திட்டங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் இத்திட்டமும் முக்கிய அங்கம் வகிக்கிறது,” என்றார் சீனர் மேம்பாட்டு உதவி மன்றத்தின் தலைவரும் போக்குவரத்து அமைச்சருமான ஓங் யி காங்.
“அனைத்துப் பின்புலங்களிலிருந்து வரும் மாணவர்கள் கற்பதற்கும் வளர்வதற்கும் ஏற்ற அனை வரையும் உள்ளடக்கக்கூடிய சுற்றுச்சூழலை ஏற்படுத்துவதில் சுய உதவிக் குழுக்கள் பாராட்டத்தக்க பணியைச் செய்துள்ளன,” என்றார் அமைச்சரவையில் யூரேஷியர்களின் பிரதிநிதியும் தொடர்பு, தகவல் அமைச்சருமான எஸ். ஈஸ்வரன்.
“பள்ளிக்குப் பிந்திய ஒரு பாதுகாப்பான ஆக்கபூர்வமான சுற்றுச்சூழலை ‘பிக் ஹார்ட்’ மாணவர் பராமரிப்பு நிலையம் வழங்கியுள்ளது. அங்கு அவர்கள் தங்கள் வகுப்பறை பாடங்களில் கூடுதல் பயிற்சி பெறவும் நல்ல சமூக நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது,” என்றார் சிண்டாவின் தலைவரும் பிரதமர் அலுவலக அமைச்சருமான இந்திராணி ராஜா.
மெண்டாக்கியின் தலைவரும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி இதுபற்றி கருத்துரைக்கையில், “பல்வேறு கல்வித் திட்டங்களை வழங்கி வரும் ‘பிக் ஹார்ட்’ மாணவர் பராமரிப்பு நிலையம் மாணவர்களின் மீட்சித் திறனை வளர்த்து அவர்களின் மேம்பாட்டை வலுப்படுத்துகிறது.
“இந்த முயற்சியில் சுயஉதவிக் குழுக்கள் அனைத்தும் இதற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்,” என்றார்.
– Tamil Murasu